மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடல்வழி முற்றுகையைத் தொடர்ந்தால், தாங்களும் தகுந்த பதிலடி கொடுப்போம் என ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 13 முதல் ஈரானியத் துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தி வருவதால், ஆத்திரமடைந்த ஈரான் ஏற்கனவே சில சரக்குக் கப்பல்களைச் சிறைபிடித்துள்ளது. இதில் ஒரு கப்பல் இந்தியாவிற்கு வர வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச ஈரான் மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் மூலமாக மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஈரானின் இந்தத் தீவிர நிலைப்பாடு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.