அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி பூஜையை பலர் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்நிலையில் சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி 36வது தெருவில் உள்ள நவராத்திரி கோவிலில் லட்சுமி, சரஸ்வதி, சக்தி உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று துவங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் மகாபாரதத்தை குறிப்பிடும் பொம்மைகள், நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொம்மைகள், இயற்கை உணவு முறையை நினைவுபடுத்தும் பொம்மைகள், பண்டையகாலத்தில் நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 4 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தாண்டு இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தை குறிக்கும் வகையில் ஒருவர் அமர்ந்து விண்கலத்தை இயக்குவது போலவும் ராக்கெட் மேலே சென்றவுடன் லேண்டர் விண்கலம் நிலவில் தரை இறங்குவது போன்றும் கொலுவில் கண்காட்சி இடம் பெற்றுள்ளது.