ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் நகை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓட முயன்ற மனைவியை, கணவர் கண்டுபிடித்தார். உடனே அவர் எச்சரிக்கை எழுப்பி கிராம மக்களை ஒன்று திரட்டினார். அதன்பின் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியது. கணவர் தன்னுடைய மனைவியை அவள் காதலனுக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி வைத்தார்.

சிசாய் பகுதியை சேர்ந்த ரிங்கு சாஹு, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மிளா குமாரியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 3 வயது மகள் உள்ளார். திருமண வாழ்க்கை சீராக சென்றுகொண்டிருந்த நிலையில், பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த அவினாஷ் குமார் என்ற ஓட்டுநருடன் ஊர்மிளா நெருக்கமாக பழகினார். இருவருக்குமிடையே ரகசியமாக சந்திப்புகள் அதிகரித்தது. இதை அறிந்த கணவர் பலமுறை சமாதானப்படுத்த முயன்றும், ஊர்மிளா காதல் மீது வெறி கொண்டதால், எதையும் கேட்க மறுத்தார்.

அதோடு, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் கிராமமெங்கும் பேசுபொருளாக மாறின. ஊர்மிளாவின் பெற்றோரும் அவளிடம் நியாயம் பேச முயன்றனர். ஆனால், ஊர்மிளா தன் காதலனுடன் வாழ வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார். இறுதியில், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் ஓட திட்டமிட்டார். அந்த முயற்சியை கணவர் ரிங்கு தடுத்து நிறுத்தினார்.

பின்னர், கிராம மக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அதில், ரிங்கு சாஹு தனது மனைவியுடன் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். அதோடு, ஊர்மிளாவை காதலன் அவினாஷுடன் உடனடியாக திருமணம் செய்து வைத்தார். கிராம மக்களின் முன்னிலையில், அவினாஷ் ஊர்மிளாவின் தலைமுடியில் கருஞ்சிவப்பு பூசி, திருமணத்தை நிறைவேற்றினார். இதன் பிறகு, இருவரும் ஒன்றாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கும்லா மட்டுமல்லாமல், முழு ஜார்க்கண்டிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “மனைவியை துரோகம் செய்ததற்காக கணவன் எடுத்த இந்த முடிவு சரியா, தவறா?” என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.