ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள மணிநாத்பூர் கிராமத்தில், இடுகாட்டில் புதைக்கப்பட்ட 5 பேரின் சடலங்கள் மர்மமான முறையில் காணாமல் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த ககேஷ்வர் சமல், ஹதபந்து பியூரியா உள்ளிட்ட ஐந்து பேரின் உடல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. வைதரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மயானத்தில், சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டு உடல்கள் மாயமாகி இருப்பதைக்கண்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தக் கிராமத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறையல்ல; 2016-ல் தொடங்கி கடந்த 2023, 2025 ஆண்டுகளிலும் தொடர்ந்து சடலங்கள் மாயமாகி வருகின்றன. சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே மது பாட்டில்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் துணிகளைக் கண்ட மக்கள், மாந்திரீக பூஜைகளுக்காக அல்லது சட்டவிரோத மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக உடல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். கிராம மக்களின் தொடர் புகார்களை அடுத்து, பத்ராக் மாவட்ட எஸ்பி மனோஜ் ராவத் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
