விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ராமசாமி மணிமண்டபம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் இன்றி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பதும், அவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மகேஸ்வரியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால், அவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு வேறொருவருடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே இவரைக் கொலை செய்தாரா அல்லது வேறு யாராவது இந்தப் பின்னணியில் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து திண்டிவனம் கொண்டு வரப்பட்டு இப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.