தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் எஸ். முத்துசாமி, ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று பேசியபோது கூறியதாவது: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் அரசியல் லாபத்திற்காக தமிழக அரசை குறை கூறி வருகின்றன. அந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் அரசு வீடியோ ஆதாரங்களுடன் விளக்கி வழங்கியுள்ளது. எனவே மக்கள் உண்மைகளை தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

கரூர் சம்பவம் குறித்த விசாரணை ஆணையம் பணியைத் தொடங்கியுள்ளது. மேலும், நீதிமன்றம் பல்வேறு வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. அவற்றின் அடிப்படையில் போலீஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்தவிதமான பயமும் இல்லை. கரூர் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் குறித்து அறிந்த உடனே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நள்ளிரவில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி தேவையான உதவிகளை வழங்கினார். சிறுநீரகம் திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை முடிந்த பிறகே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.