கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம், கல்லஹங்கரகா கிராமத்தைச் சேர்ந்தவர் குண்டேராவ் நீராலு (45). விவசாயியான இவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், குண்டேராவ் நீராலுவின் மகள் மஞ்சுளா (17), கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த முன்தினம் மஞ்சுளா வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய தந்தை குண்டேராவ் நீராலு, பக்கத்து வீட்டுக்காரர்தான் நிலத்தகராறு காரணமாக மனரீதியாகத் தொல்லை கொடுத்ததால் மஞ்சுளா தற்கொலை செய்துகொண்டார் என்று கடிதம் ஒன்றையும் கைப்பற்றிக் கொடுத்தார்.

ஆனால், கால் ஊனமுற்ற சிறுமி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தது எப்படி என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, மஞ்சுளாவின் தந்தையிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குண்டேராவ் நீராலு முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீசாரின் சந்தேகம் வலுத்தது.

விசாரணையின் முடிவில், பக்கத்து வீட்டுக்காரரை நிலத்தகராறு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்ட குண்டேராவ் நீராலு, வேறு யாரும் இல்லாத சமயத்தில், மாற்றுத்திறனாளியான தனது மகள் மஞ்சுளாவைத் தூக்கில் துடிக்க துடிக்கக் கொன்றுள்ளார் என்பதும், பின்னர் அவரே மகள் எழுதியதுபோல தற்கொலைக் கடிதம் எழுதி நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, கொலையாளி குண்டேராவ் நீராலுவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.