தமிழக அரசியலின் உற்றுநோக்கப்படும் களமாக தேனி மாவட்டம் மாறியுள்ளது, குறிப்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பி.எஸ்-ஸை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு பலமான ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவின் தூணாக இருந்த ஓ.பி.எஸ், தற்போது திமுக ஆதரவுடன் களம் காண்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரை அவரது சொந்த மண்ணிலேயே அரசியல் ரீதியாக முடக்க வேண்டும் என்ற இலக்கோடு, அதிமுக தலைமை பி.எல்.ஏ. ஜெகனாத் மிஸ்ராவைத் தனது துருப்புச் சீட்டாக இறக்கியுள்ளது. பிரபல தொழிலதிபரான மிஸ்ரா, போடி பகுதியில் செல்வாக்கு மிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், அசுரத்தனமான பணபலம் கொண்டவர் என்பதும் அதிமுகவிற்குப் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் திமுக பக்கம் செல்லவிருந்த ஜெகனாத் மிஸ்ரா, ஓ.பி.எஸ்-ஸின் திமுக ஆதரவு நிலைப்பாட்டால் அதிமுக பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளார். அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி, ஓ.பி.எஸ் மீதான அதிருப்தியில் உள்ளவர்கள் மற்றும் மிஸ்ராவின் சமூக வாக்குகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து வெற்றியை உறுதி செய்ய இ.பி.எஸ் டீம் திட்டமிட்டுள்ளது.
“வாய்ப்பு கொடுத்தால் ஓ.பி.எஸ் கோட்டையைத் தகர்ப்பேன்” என மிஸ்ரா விடுத்த சவால் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே புகுந்துள்ள இந்த ‘மிஸ்ரா’ அஸ்திரம் ஓ.பி.எஸ்-ஸின் அரசியல் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டுவருமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.
