திருப்பத்தூர் மாவட்டம் மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களின் நட்பை நிரூபிப்பதாகக் கூறி செய்த ஆபத்தான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவிகள் அருகில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று, கொதிக்கும் தேநீரை வாங்கித் தங்களின் கைகளை ஒன்றாகச் சேர்த்துக் பிடித்துக்கொண்டு அதன் மீது ஊற்றியுள்ளனர். எவ்வளவு சூடாக இருந்தாலும் கைகளைப் பிரிக்கக் கூடாது என்றும், துன்பத்திலும் இன்பத்திலும் பிரியாமல் இருப்பதே உண்மையான நட்பு என்றும் கூறி, இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் தற்போதுள்ள சமூக வலைதள மோகத்தால், வட மாநிலங்களில் ட்ரெண்டிங்காகி வரும் இதுபோன்ற ஆபத்தான செயல்களைத் தமிழக மாணவர்களும் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது. கொதிக்கும் தேநீர் கையில் படும்போது வலியால் மாணவிகள் அலறிய அந்த வீடியோ காட்சிகள் காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்நிலையில் தேர்வு முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட எத்தனையோ வழிகள் இருக்கையில், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
