சென்னை நகரத்தின் நொளம்பூர் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, இரண்டு பேர் சேர்ந்து தாக்கிய அதிர்ச்சிகர சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது.

மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையிலான குடிநீர் விநியோகப் பிரச்சனை தொடர்பாக வந்த புகாரையடுத்து, நொளம்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பாலாஜி மற்றும் பெண் காவலர் மஞ்சு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். குறித்த குடியிருப்புகளில் தண்ணீர் விநியோகம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு குடியிருப்பு சங்கத் தலைவராக உள்ள வெங்கடேசன் என்றவர், கடலோர காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு, காவலர் பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர், காவலரை தள்ளி, தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில், இருவர் காவலரை தள்ளி அறையும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இதில் கான்ஸ்டபிள் பாலாஜி படுகாயமடைந்தார். அவருக்கு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.