அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக கட்சியில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றுவதற்கு பிறகு தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. அதிமுகவுக்கு சோதனையான காலகட்டத்தில் பிரிந்து சென்ற சக்திகள் மீண்டும் இணைந்தால் மட்டும்தான் வெற்றி நிச்சயம். எனவே இன்னும் பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியில் பிரிந்தவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் அப்படி அவர் செய்யவில்லை என்றால் நானே அந்த வேலையை செய்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்திற்கு ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் எம்பி ரவீந்திரநாத், சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தார். மேலும் இதே கருத்தை ஏற்கனவே ஒருமுறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
