அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் (35) எனும் இளைஞர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், குறிப்பாக சீக்கியர்களின் பாரம்பரிய யுத்தக் கலை கட்காவை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தவர். ஜூலை 13, 2025 அன்று சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கூர்மையான கண்டாயுடன் கட்கா கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான நபராகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக அவர் உயிரிழந்தது, உலகம் முழுவதும் உள்ள சிக் சமூகத்தில் பெரும் துயரத்தையும் அதிருப்தியையும் கிளப்பியுள்ளது.

காவல்துறையினர் அளித்த தகவலின்படி, கையில் கூர்மையான ஆயுதங்கள் இருந்ததால் அங்கு இருந்த பொதுமக்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாக கருதி, பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் அவற்றை ஏற்காததால் துப்பாக்கிச் சூடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினர்.

“>

ஆனால், கலாச்சார கலைகளை வெளிப்படுத்தியவரை குற்றவாளியாகக் கருதி சுட்டுக் கொன்றது சரியான நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது, காவல்துறை நடவடிக்கை அவசியமானதா அல்லது அதிகப்படியானதா என்ற விவாதத்தையும் தீவிரமாக கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு எதிராக சீக்கிய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய யுத்தக் கலை கட்காவை வெளிப்படுத்திய ஒருவரை மத அடையாளத்தின் அடிப்படையில் தவறாகப் புரிந்து தவறான நடவடிக்கை எடுத்ததாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் காவல்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இது இன்னொரு உதாரணமாக மாறி, “மனிதாபிமான அடிப்படையில் காவல்துறை வேறு வழிகளை தேட முடியாதா?” என்ற கேள்வியை உலகளவில் எழுப்பியுள்ளது.