மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில், அவசர கால ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் நடுரோட்டில் குழந்தையைப் பெற்றெடுத்த அவலச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்தாரி தாலுகாவைச் சேர்ந்த சஞ்சனா என்ற அந்தப் பெண்ணிற்கு அதிகாலை சுமார் 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மேலும் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பலமுறை அழைப்பு விடுத்தும், சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் வாகனம் வரவில்லை. கடும் குளிரிலும் இருட்டிலும் வேறு வழியின்றி அந்தப் பெண் மருத்துவமனைக்கு நடந்து செல்ல முயன்றபோது, வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால் சாலையோரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

“>

இதனால் மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் குறித்த அரசின் வாக்குறுதிகளை இந்தச் சம்பவம் கேள்விக்குறியாக்கியுள்ளது. டார்ச் லைட் வெளிச்சத்திலும், ஒரு தார்ப்பாய் துணியை மறைப்பாகக் கொண்டுமே அந்தப் பெண்ணிற்கு சாலையோரத்தில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட நேரத்திற்குப் பிறகே அந்தப் பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தாலும், நவீன மருத்துவ வசதிகள் உள்ளதாகக் கூறப்படும் ஒரு மாவட்டத்தில் இத்தகைய அலட்சியம் நேர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.