கோவை காந்திபுரம் பகுதியில் நள்ளிரவில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நிமித்தமாக கோவையில் தங்கியிருக்கும் இந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, திடீரென நடுரோட்டில் பயங்கர மோதலாக மாறியுள்ளது. கையில் கிடைத்த பெல்ட்டுகளைக் கொண்டு சினிமா பாணியில் அவர்கள் மோதிக்கொண்டதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளூர் மக்கள் தலையிட்டு அவர்களைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தாலும், இந்த மோதல் கோவையின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

​இந்தச் சண்டை தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொது இடத்தில் சண்டையிட்ட அந்த இளைஞர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “ஊர்ல வந்து வேலை பார்க்கிற இடத்துல இதெல்லாம் தேவையா?” எனப் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், இது போன்ற அத்துமீறல்கள் மீண்டும் நடக்காத வண்ணம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துரிதமாகக் களத்தில் இறங்கியுள்ளது காவல்துறை.