சுற்றுலாத்தலமான கோவாவில் பாராசெயிலிங் (Parasailing) சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கயிறு சிக்கி, அவர் கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் சுற்றுலா பயணி ஒருவர் கோவா சென்றிருந்தபோது, கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாராசெயிலிங் பாராசூட்டுடன் இணைக்கப்பட்டிருந்த வலுவான கயிறு, அவரது கழுத்தைச் சுற்றி இறுகியது. இதனால் மூச்சுவிட முடியாமல் திணறிய அவர், பாராசூட்டிலிருந்து விடுபட்டு கடலின் நடுப்பகுதியில் விழுந்துள்ளார்.
இந்தத் திகிலூட்டும் காட்சிகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதா, “அந்த ஒரு நிமிடம் எனது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்தேன். கடலின் நடுவே மூச்சுத்திணறி, கழுத்தில் கயிறு இறுக்க உயிர் பிழைக்கப் போராடினேன். கடவுள் புண்ணியத்தில் யாரோ என்னைக் காப்பாற்றினார்கள். அனைவருக்கும் இது போன்ற இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். சாகச விளையாட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இது போன்ற விபத்துகளுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
