உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பிரபல உடற்பயிற்சி கூடத்தில் (Gym), பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஜிம் உரிமையாளர்களான இரண்டு சகோதரர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பரேலியில் ‘அல்டிமேட் ஃபிட்னஸ் கிளப்’ (Ultimate Fitness Club) என்ற பெயரில் இயங்கி வந்த ஜிம்மிற்கு, நகரின் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வந்து சென்றனர். இந்த ஜிம்மின் உரிமையாளர்களான அக்ரம் வேக் மற்றும் ஆலம் வேக் ஆகிய இருவரும், அங்கு வரும் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து, அதனை வைத்து அவர்களைப் பிளாக்மெயில் செய்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். போலீஸார் அந்த ஜிம்மிற்குச் சீல் வைத்து நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அங்கிருந்து  ஏராளமான ஆபாச வீடியோக்கள், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் (Steroids), பாலுணர்வைத் தூண்டும் மருந்துகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன், ஜிம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் உரிமையாளர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். ஜிம்மின் பெயரைக் கெடுக்காமல் இருக்க, கட்டிடத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த ‘அல்டிமேட் ஃபிட்னஸ் கிளப்’ என்ற பெரிய பெயர் பலகைகளை ஒரே இரவில் அவர் அகற்றியுள்ளார். மேலும், போலீஸ் மற்றும் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்து, ஜிம்மிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அவர் முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கிய அக்ரம் வேக் மற்றும் ஆலம் வேக் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.