தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய் மீது, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் அடுக்கியுள்ள குற்றச்சாட்டுகள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தனது 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் துணிந்த சங்கீதா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 12 பக்க மனுவில் கூறியிருப்பதாவது,
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற திருமண வாழ்க்கை, 2021-ல் அவர் ஒரு நடிகையுடன் தவறான உறவில் இருந்ததை அறிந்ததும் சீர்குலைந்தது. இது நான் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம். அந்த நடிகை எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதனை அவர் கண்டிக்காமல், அமைதியாக இருந்து மறைமுக ஆதரவு அளித்தார். இது எனக்கும் என் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.
நடிகையுடனான உறவைத் தட்டிக் கேட்டபோது, எனக்குப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்பாடுகளை விதித்தார். தனது நிதி பலத்தைக் காட்டி என்னை மேலாதிக்கம் செய்ய முயன்றார். 2025 நவம்பர் 9-ஆம் தேதி வரை அவரை நேரடியாகச் சந்தித்துப் பேசி, கண்ணியமான முறையில் பிரிய முயன்றேன். ஆனால், எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால் நீதிமன்றத்தை நாடினேன்.
தற்போது வெறும் காகித அளவில் மட்டுமே நீடிக்கும் இந்த உறவில் இனி தொடர முடியாது எனக் குறிப்பிட்டுள்ள சங்கீதா, நீதிமன்றத்தில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.இந்த வழக்கை ரகசியமாக (In-camera proceedings) விசாரணை செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அந்த நடிகையை இரண்டாவது பிரதிவாதியாக வழக்கில் சேர்த்து, அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பேன்.
விவாகரத்து தொடர்பான செய்திகளைச் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடத் தடை விதிக்க வேண்டும். விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நிரந்தர ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போது வசிக்கும் இல்லத்திலேயே தங்குவதற்கு உரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் – சங்கீதா தம்பதி பிரிந்து வாழ்வதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விஜய் தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் அளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
