தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த் சமீபத்தில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதேபோன்று நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனி படை போலீஸார் மேலும் பலருக்கு சம்மன் அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து பலரும் விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவர்களிடம் கைது செய்யாமல் இருக்க வேண்டும் எனில் லஞ்சம் வேண்டுமென இன்ஸ்பெக்டர் மற்றும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மிரட்டியதாகவும் அவர்கள் மூவரும் சேர்ந்து லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் தகவல் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட அவர்கள் 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டரும் இந்த விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் வங்கி கணக்கு ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.