திருப்பரங்குன்றத்தில் காமராஜரின் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவை பற்றி அவர் பேசும்போது, “விஜய் பேசியது திரைப்பட வசனம்போல் இருந்தது. இது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. அவரது முகத்தில் சோகத்தையும், உருக்கத்தையும் காண முடியவில்லை. உண்மையான வருத்தத்துடன், உணர்ச்சிப் பூர்வமாக அவர் பேச வேண்டிய நேரத்தில், வெறும் வசனங்களாகச் சொல்லிக் கழித்துவிட்டார்” என கடுமையாக விமர்சித்தார்.
“திரைக்கவர்ச்சியில் நாட்டை ஆள முடியாது. இன்று திரைமயக்கத்திலும், திரைபோதையிலும் மக்கள் உள்ளனர். விஜய்க்கு உண்மையில் சுய சிந்தனை இருந்திருந்தால், அருகில் யாரும் இல்லாமல் தனியாக பேசியிருப்பார். CM சார்’ போன்ற வார்த்தைகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன” என்றும் சீமான் சாடினார். “இந்த விவகாரம் மீண்டும் நிகழாது என எந்தக் கட்சியும் இதுவரை உறுதிமொழி அளிக்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சர் மீது விஜய்க்கு துளியும் மதிப்பில்லை என்றாலும் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு கண்டிப்பாக மதிப்பு தர வேண்டும். அதோடு தம்பி விஜய் அங்கு சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் உயிரிழந்தனர் என்றார்.
