கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியை விசிக தலைவர் திருமாவளவன் எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கு பதிலளித்த திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “கரூர் துயரச் சம்பவம் குறித்து அரசு அமைத்துள்ள ஒருநபர் விசாரணை ஆணையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகும் வரை, யார் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகிறதோ, அவர்கள்மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தச் சம்பவத்தில் விஜய் நிகழ்விடத்திற்கு வந்து உரையாற்றியதையும், பின்னர் சென்றதையும் தவிர, அவரது நேரடி தொடர்பு தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், உள்ளூர் நிர்வாகத்தில் சில தவறுகள் ஏற்பட்டன. இதையடுத்து சம்பவ இடத்தில் ஏற்பாடுகளை செய்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தும் அந்த ஏற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுவதால், அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”

மேலும், “தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காகவே, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கூறினார்.