சிவகங்கை மாவட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து பிரசார வாகனத்தில் காரைக்குடிக்கு சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.

மதுரையிலிருந்து காரைக்குடி நோக்கிப் பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தபோது, தங்களது தலைவரைக் காண ஆர்வம் கொண்ட தொண்டர்கள் பலர் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு அதன் மீது ஏறித் தொற்ற முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர் ஒருவர், வாகனத்தில் தொற்றியிருந்த தொண்டர்களின் விரல்களைத் தனது பூட்ஸ் காலால் நசுக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கினர்.  பிரசார வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என்றும், பிரசாரக் கூட்டங்களுக்குக் கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றும் த.வெ.க. தலைமை ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. கட்சியின் அறிவுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், உற்சாக மிகுதியால் ரசிகர்கள் வாகனங்களை முந்திச் செல்ல முயல்வதும், விபத்துகளில் சிக்குவதும் வாடிக்கையாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொண்டர்களின் விரல்களைப் பவுன்சர் நசுக்கிய விவகாரம், கட்சி வட்டாரத்திலும் பொதுமக்களிடமும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.