தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கஞ்சா கருப்புவின் குடும்பத்தில் மிக துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டாண்மைக் கோட்டையைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்புவின் சொந்த மூத்த சகோதரரான அறிவழகன் (45) என்பவர் இன்று சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் வழக்கம்போல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் பறந்துள்ளது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட அறிவழகன், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீசார், அறிவழகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மர்ம வாகனம் எது, அதை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொந்த அண்ணன் விபத்தில் பலியான செய்தியைக் கேட்டு நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போயுள்ளனர்.