தொழிலதிபருக்கு ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கி ரூ.70 லட்சம் கமிஷன் பெற்று மோசடி செய்த புகாரில், ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். பேருந்து போக்குவரத்து நிறுவனம் நடத்தி வரும் இவர், தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் பெற முயன்றுள்ளார். அப்போது, தென்காசியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னையில் வசிப்பவருமான ஹரி நாடார் (எ) ஹரிகோபாலகிருஷ்ணன் (41) மற்றும் அவரது கூட்டாளி பாலு ஆகியோரை அணுகியுள்ளார்.

ஆனந்த்குமாருக்கு ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதி அளித்த இருவரும், அதற்கு ஈடாக தலா ரூ.10 கோடி மதிப்பிலான 3 போலி காசோலைகளையும் (Demand Drafts), ரூ.5 கோடி மதிப்பிலான ஒரு காசோலையையும் வழங்கியுள்ளனர். இந்தச் சேவைகாக கமிஷன் தொகையாக ஆனந்த்குமாரிடம் இருந்து ரூ.70 லட்சத்தைப் பெற்றுள்ளனர்.

ஆனந்த்குமார் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரி நாடாரிடம் கேட்டபோது, அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்த்குமார் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

விசாரணையைத் தொடங்கிய போலீஸார், ஹரி நாடாரை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவரது கூட்டாளி பாலு சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 7 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், வரும் 23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.