தமிழகத்தில் பாஜகவின் தந்திரங்கள் ஒருபோதும் பலிக்காது என்றும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கால் பதிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக என்ற கூடாரத்தில் முதலில் ஒட்டகமாக நுழைந்து, பிறகு அந்தச் சின்னத்தையே தன் வசமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இந்த வியூகம் வட மாநிலங்களில் பலிக்கலாம், ஆனால் தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணான தமிழகத்தில் ஒருபோதும் செலாவணி ஆகாது.
மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, ‘வசந்த பஞ்சமி’ என்ற வட மாநில சுப நாளைத் தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க முயன்ற பாஜக, அது முடியாமல் போனதால் அதிமுக போன்ற பெரிய கட்சியின் தோள் மீது சவாரி செய்யத் துடிக்கிறது. அதிமுக கூடாரத்தில் பாஜக என்ற ஒட்டகம் நுழைகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அச்சுறுத்தல்களை ஏவி, ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியை பாஜக உருவாக்கியுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில் அமர்ந்திருந்தவர்கள் பரிதாபத்திற்குரிய நிலையில் இருந்தனர். ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள், வழக்கிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் என முகவரி இழந்தவர்களே மேடையை அலங்கரித்தனர். ‘சரணம் காவிச் சரணம்’ என அவர்கள் கூனிக் குறுகி அமர்ந்திருந்தனர். கடந்த தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த 4 இடங்கள் கூட இந்த முறை கிடைக்குமா என்பது சந்தேகமே.
பாஜக பேசும் ‘டபுள் என்ஜின்’ (இரட்டை இயந்திர) அரசு என்பது தமிழகத்தில் எடுபடாது. ஒரு என்ஜினாலேயே இழுக்க முடியாததால் தான் அவர்கள் இரண்டு என்ஜின் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கல்வி, மருத்துவம், அமைதி என அனைத்துத் துறைகளிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சி எட்டியுள்ள உயரத்தை பாஜக ஆளும் மாநிலங்கள் எட்ட முடியாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போல, இவை வெறும் ‘டப்பா என்ஜின்கள்’ தான். மேலும் தமிழக மக்கள் தெளிவான உறுதியோடு உள்ளனர். எத்தனை வாண வேடிக்கைகளைக் காட்டினாலும், திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணியே 2026-ல் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சியை உறுதி செய்யும்.
