தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 3 மாத மகளிர் உரிமைத் தொகையுடன் கோடைக்கால சிறப்புத் தொகையும் சேர்த்து ₹5,000 வழங்கப்படுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “திமுக அரசுக்குத் தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் தற்போது முன்கூட்டியே ₹5,000 பணத்தைக் கொடுத்து மக்களைக் கவரப் பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ₹2,000 வழங்கும் ‘குலவிளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும் என எடப்பாடியார் அறிவித்ததைக் கண்டு திமுக மிரண்டு போய்விட்டது” என்றார்.

மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், “அதிமுக கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தை நான்கு ஆண்டுகளாக முடக்கி வைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்தில் ஓட்டுப் போடும் மாணவர்களைக் குறிவைத்து லேப்டாப் கொடுக்கிறார்கள். இது முழுக்க முழுக்கத் தேர்தலுக்கான நாடகம்” என்று அவர் சாடினார்.