எம்.எஸ்.தோனி இல்லையென்றால் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அதுமட்டுமின்றி 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.

இதற்கு சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் காரணம். ஐபிஎல்லில், எந்தெந்த வீரர்கள் தேவை என்பதை விட, எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் அதிகம். அந்த வகையில் கில்லி போல் ஒவ்வொரு வீரரையும் பயன்படுத்தி கோப்பையை வென்றுள்ளார் கேப்டன் தோனி. இன்றும் இறுதிப்போட்டியில் ஜடேஜாவை தூக்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியால் மட்டும் எப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு அடுத்தடுத்து முன்னேற முடிகிறது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். வாசிம் ஜாபர் கூறுகையில், தோனியால்தான் சென்னையின் வெற்றி சாத்தியம். தோனியை சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கினால் நிச்சயம் அது அவ்வளவு வலுவான அணியாக இருக்காது. ஏனென்றால் இப்படிப்பட்ட அணியை வைத்துக்கொண்டு தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். துஷார் தேஷ்பாண்டே இதற்கு முன் 2 சீசன்களில் விளையாடிய போது அவ்வளவு வெற்றிகரமாக இருக்கவில்லை. பத்திரனா, ஆகாஷ் சிங் போன்ற வீரர்கள் சென்னை அணிக்கு புதியவர்கள். தீபக் சாஹரால் சீசன் முழுவதும் கூட விளையாட முடியவில்லை. ஐபிஎல் தொடரின் வரலாற்றைப் பார்க்கும் போது தீக்சனா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் அல்ல. மொயீன் அலி மற்றும் ஜடேஜா சில போட்டிகளில் பந்து வீச அழைக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட பந்துவீச்சை வைத்துக்கொண்டு தோனியால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். சென்னை அணியில் உள்ள வீரர்களின் திறமைக்கு ஏற்ப திட்டமிடுபவர் தோனி. அதனால்தான் சென்னை அணியின் வெற்றி தோனியால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகிறேன். தோனி இல்லையென்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற போராட வேண்டியிருக்கும் என்றார்.