மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கலைத்து உத்தரவிட்டதையடுத்து, மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுவேந்து அதிகாரி, வரும் சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

இருப்பினும், மம்தா பானர்ஜி தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுப்பதோடு, தனது சமூக ஊடகப் பக்கங்களான எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இன்னமும் தன்னை ‘மேற்கு வங்க முதலமைச்சர்’ என்றே குறிப்பிட்டு வருகிறார். ஆளுநரிடம் தனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்கும் வழக்கமான அரசியல் மரபையும் அவர் பின்பற்ற மறுத்துவிட்டார்.

தேர்தல் முடிவுகள் உண்மையான மக்கள் தீர்ப்பைப் பிரதிபலிக்கவில்லை என்றும், சுமார் 100 தொகுதிகளில் வாக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ள போதிலும், மம்தா பானர்ஜி தொடர்ந்து பிடிவாதமாகத் தனது முதலமைச்சர் பதவியடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.