ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் 11 பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 அடி ஆழம் கொண்ட அந்தத் தொட்டியில் பாம்புகள் இருப்பதை தற்செயலாக கவனித்த குடும்பத்தினர், உடனடியாக அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து ஒவ்வொரு பாம்பாக மீட்டனர். தொட்டிக்குள் இருந்து பாம்புகள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியபோது, அங்கிருந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அச்சத்தில் உறைந்தனர்.

மேலும் பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டன. கோடை காலத்தின் வெப்பம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் இதுபோன்று நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தொட்டிகளுக்குள் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீட்டுத் தொட்டிகளை முறையாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.