முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெற்று வரும் இந்தச் சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி மத்திய சிஆர்பிஎப் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவரது மகள் கயல்விழி, கட்டிடக் கலை நிபுணரான வெங்கடேசனை மணந்துள்ளார். இவர்கள் சென்னை அடையாறு, சாஸ்திரி நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை முதலே வெங்கடேசனின் இல்லத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர், அங்கு அதிரடி சோதனையைத் தொடங்கினர்.

சோதனை நடைபெறும் வீட்டின் நுழைவாயில் மற்றும் வெளிப்பகுதிகளில் மாநில போலீசாருக்குப் பதிலாக, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (CRPF) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை; அங்கிருந்தவர்களும் வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பான ரகசியத் தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், கனிமொழி எம்.பி-யாகவும் அரசியலில் கோலோச்சி வருகின்றனர். அதேநேரம், மு.க.அழகிரி கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த மதுரை நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது மருமகன் வீட்டில் நடைபெற்று வரும் இந்த ‘ஐ.டி ரெய்டு’, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.