தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

சென்னையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரிவான கலந்தாய்வு மேற்கொண்டோம். தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும் கேரளாவில் இடுக்கி உள்பட 3 தொகுதிகளிலும் விசிக போட்டியிடவுள்ளது.

ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மாநில தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் விசிக தனித்து போட்டியிடும். ஆந்திராவில் மக்களவை, சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வலியுறுத்தி மார்ச் இரண்டாவது வாரத்தில் 4 மாநிலங்களில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தும்.விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு, மூணாறில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடமிருந்து பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.