தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோவை வடக்குத் தொகுதியில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. இதையொட்டி, அந்தத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட ‘தாமரை கோலத் திருவிழா’ நிகழ்வில் அவர் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, இது மகளிரணி நடத்தும் நிகழ்ச்சி என்றும், யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்றும் அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். இருப்பினும், அந்தத் தொகுதியில் அவர் காட்டி வரும் கூடுதல் ஆர்வம், அவர் அங்குக் களம் இறங்குவதை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது.
மறுபுறம், ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களுக்கு வானதி சீனிவாசன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் வசனத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திற்கே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 130 கட் கொடுக்கப்பட்டதையும், எமர்ஜென்சி காலத்தில் பேச்சுரிமையைப் பறித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பலமாக இருப்பதாகவும், வரும் 23-ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
