மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள திவா பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நிஷா ஷிண்டே, தெருநாய் கடித்த ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 17-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிஷாவை அந்த நாய் தோள் மற்றும் கன்னத்தில் கடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெறிநாய்க்கடி தடுப்பூசி (Anti-rabies vaccine) உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் முறைப்படி வழங்கப்பட்டன. இடையில் நலம் பெற்ற நிஷா, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கூட உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

ஆனால், இறுதித் தவணை தடுப்பூசி போடப்பட்ட மறுநாளே சிறுமிக்கு கடுமையான காய்ச்சலும், தலைவலியும் ஏற்பட்டுள்ளது. திடீரென நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு அருகில் இருந்தவர்களைக் கீறுவது, தலையை முட்டிக்கொள்வது போன்ற அறிகுறிகள் தென்பட்டதால், அவர் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தார். அனைத்து மருத்துவ விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் சிறுமி உயிரிழந்தது பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.