ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில், அந்தப் பெண்ணை அவரது நிறுவனத்தின் சிஇஓ மற்றும் பெண் நிர்வாகத் தலைவர் ஆகியோர் தங்கள் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். கார் சென்று கொண்டிருக்கும் போது, மயக்கமடையச் செய்யும் ஏதோ ஒரு பொருளை அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளனர்.

அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது, சிஇஓ மற்றும் பெண் நிர்வாகத் தலைவரின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை ஓடும் காரிலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மறுநாள் காலை மயக்கம் தெளிந்த பிறகுதான் தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சிஇஓ உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்; அந்த அறிக்கையின் முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.