அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வந்த போதிலும், அதற்கு ஈரான் எந்தப் பதிலும் அளிக்காமல் புறக்கணித்துவிட்டது.
அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஈரான், இடைத்தரகர்கள் மூலம் வரும் கோரிக்கைகள் அர்த்தமற்றவை என்றும் சாடியுள்ளது. இது சர்வதேச அரங்கில் அமைதியை நிலைநாட்ட முயன்ற பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் இது குறித்து வெளியிட்ட தகவலில், அமெரிக்காவின் கொள்கைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் ஈரானின் உறுதிப்பாடு வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரைத் தொடங்கியது யார் என்பதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், பிராந்திய அளவில் விடுக்கப்படும் அமைதி வேண்டுகோள்களை வரவேற்றாலும், பாகிஸ்தானின் தன்னிச்சையான முன்மொழிவுகளில் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரானின் இந்த பிடிவாதமான முடிவால் போர் நிறுத்தம் எப்போது ஏற்படும் என்ற கேள்விக்குறி உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
