சென்னை வடபழனியில், பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) கலந்துகொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என உறுதி அளித்த அவர், தங்களது ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு தமிழகத்தில் உயர்கல்வி வளர்ச்சி பெற்றது என்று வலியுறுத்தினார். தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் ஒரு புதிய கல்லூரி கூட தொடங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, டாஸ்மாக் ஊழல் குறித்து கடுமையான விமர்சனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாக கூறிய EPS, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்பட்ட போதிலும், அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது. என்றார். காவலர்களே பாதுகாப்பில்லாமல் தாக்கப்படுகின்றனர் என்றும், முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களை ‘2.0’, ‘3.0’ என்று வைத்துவிட்டு கடைசியில் ஓடிவிட்டார் என விமர்சித்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கான வன்கொடுமை வழக்கில் “யார் அந்த சார்?” என்பது கண்டறியப்படும் என உறுதி அளித்தார். டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், ரூ.1,000 கோடி என்று கூறப்படும் ஊழல் உண்மையில் ரூ.40,000 கோடி வரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.

திமுக நிறுத்திய திட்டங்களை மீண்டும் கொண்டு வர அதிமுக வாக்குறுதி

திமுக அரசு தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம் போன்ற பல பயனுள்ள திட்டங்களை நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்தனை திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என வலியுறுத்தினார்.

ரூ.60,000 கோடி முதலீடுகளை அதிமுக ஆட்சியில் ஈர்த்ததாகவும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கச் சென்றாரா அல்லது வேறு காரணத்திற்காகச்சென்றாரா என்பது பின்னர் தெரியும் எனக் கிண்டல் செய்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.

கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்படமாட்டார்கள் என்றும், துரோகம் செய்பவர்கள் நடுரோட்டிலேயே நிற்பார்கள், விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள் எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்.