தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி குறித்து, திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த திமுக-காங்கிரஸ் நட்புறவை முறித்துக் கொண்டு, விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதை அவர் ‘பச்சைத் துரோகம்’ என்று விமர்சித்துள்ளார்.

மேலும் “துரோகம் எங்களுக்குப் புதிதல்ல, ஆனால் சந்தர்ப்பவாதத்திற்கு கொள்கை முலாம் பூசும் காங்கிரஸின் முயற்சி வேதனை அளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தது முதல், இக்கட்டான சூழலில் காங்கிரசுக்குத் தோள் கொடுத்தது வரை திமுக செய்த தியாகங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பாஜக பின்பற்றும் அதே குறுக்குவழி அரசியலை இப்போது காங்கிரஸும் கையில் எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, மாற்று அணிக்கு ஆதரவு அளிப்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் வஞ்சகம் என்று டி.ஆர்.பாலு சாடியுள்ளார்.

அதிகாரத்திற்காக அறமற்ற முறையில் செயல்படுவதாகக் காங்கிரஸை விமர்சித்துள்ள அவர், தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ராகுல் காந்திக்கு அளித்த ஆதரவையும், அவருடன் கொண்டிருந்த சகோதரத்துவத்தையும் காங்கிரஸ் மறந்திருக்கலாம், ஆனால் காலம் இதற்குப் பதில் சொல்லும் எனத் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.