தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அரசியல் களத்தின் பெரும் ஆளுமைகளாகக் கருதப்பட்டவர்களின் வாரிசுகள் பல இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த இந்தத் தேர்தலில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகளின் முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

மேலும் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அ.ம.மு.க வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியதும், திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி அ.தி.மு.க வேட்பாளரிடம் தோற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதும் வாரிசு அரசியலுக்கு மக்கள் அளித்துள்ள ஒரு முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோல், பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் கண்ட ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனும் த.வெ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீண்டகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த குடும்பங்களின் வாரிசுகள், பாரம்பரியமான தங்களது தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தை உணர்த்துகிறது.

இந்நிலையில் வாரிசு அரசியல் என்ற பிம்பத்தைக் கடந்து, புதிய மாற்றத்தையும் செயல்திறனையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இத்தகைய தோல்விகள், பெரிய கட்சிகள் தங்களின் வேட்பாளர் தேர்வு மற்றும் களப்பணிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது.