தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 118 இடங்களை எட்ட முடியாமல் 10 இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை இழந்தது. குறிப்பாக 12 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க தோல்வியைத் தழுவியது அந்தப் கட்சியின் பெரும்பான்மை கனவை தடுத்து நிறுத்தியுள்ளது.
மேலும் திருக்கோவிலூர் விக்கிரவாண்டி, குளித்தலை, பழனி, கோவில்பட்டி மற்றும் ஊட்டி ஆகிய தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு பறிபோனது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
மேலும் திண்டுக்கல், கரூர், பாபநாசம், கிள்ளியூர், புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஆகிய 6 தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் 2,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனர். இந்த 12 தொகுதிகளில் சிறிய அளவிலான வாக்குகள் சாதகமாக இருந்திருந்தால், அக்கட்சி எந்தவித சிக்கலுமின்றி 120 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மை பெற்றுத் தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியும்.
இந்நிலையில் இது தவிர திருவண்ணாமலை, ஏற்காடு, விருத்தாசலம் உள்ளிட்ட மேலும் 5 தொகுதிகளிலும் 2,500 வாக்குகளுக்குள் தோல்வி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தல் முடிவுகள் த.வெ.க-விற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலும், சொற்ப வாக்கு வித்தியாசங்கள் ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தடுத்துள்ளன.
