பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், துபாயில் தனது புதிய உணவகத்தைத் தொடங்கியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனதுபாயில் ‘கண்ணன் ரவி’ குழுமத்துடன் இணைந்து ‘ஐந்திணை’ என்ற பெயரில் புதிய உணவகத்தை மாதம்பட்டி ரங்கராஜ் தொடங்கியுள்ளார். டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற இதன் திறப்பு விழாவில், தனது மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு மகன்களுடன் அவர் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து துபாயில் தொடங்கப்பட்ட ‘பாந்தர் கிளப்’ (Panther Club) திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்றார்.
இந்த விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஷாருக்கானுடன் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்விழாவில் நடிகை ரோஜா, இயக்குனர் செல்வமணி மற்றும் நடிகை நோரா ஃபதேஹி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொழில் ரீதியாகப் பல்வேறு சாதனைகளைச் செய்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த சில மாதங்களாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான புகார்களால் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தங்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தற்போது அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்குப் பிறந்த குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், அதை உறுதிப்படுத்த டி.என்.ஏ (DNA) பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
View this post on Instagram
தன் மீதான புகார்களை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், தனது பெயரைப் பயன்படுத்தி ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் தொழிலில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்த ரங்கராஜின் மனைவி ஸ்ருதி, சமீபத்தில் தனது மௌனத்தைக் கலைத்தார். “தங்கள் குடும்பத்தைப் பிரிக்கச் சதி நடப்பதாக” குறிப்பிட்ட அவர், தனது கணவருக்கு முழு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், மகளிர் ஆணையத்தில் ரங்கராஜ் ஆஜரானபோது அவருடன் ஸ்ருதியும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. டி.என்.ஏ பரிசோதனையில் உண்மை உறுதியானால் குழந்தையின் பொறுப்பை ஏற்பதாக ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவர் இதுவரை பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஜாய் கிரிசில்டா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்தச் சட்டப் போராட்டங்களுக்கு மத்தியிலும், துபாயில் ரங்கராஜ் தனது வணிகத்தை விரிவாக்கம் செய்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
