
துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல் கோல்டன் டவரில் இரண்டு அலுவலகங்களை வைத்திருந்த இந்த நிறுவனம், 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து, ‘பாதுகாப்பான வருமானம்’ எனக் கூறி தொலைபேசி உரையாடல்கள் மூலம் ஏராளமான முதலீட்டாளர்களை இணைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில், கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன, அலுவலகம் காலியாகவும் காணப்படுகிறது.
இந்த மோசடியில் இந்தியர்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த முகமது, ஃபயாஸ் பொய்ல் ஆகியோர் $75,000 முதலீடு செய்ததாகவும், மற்றொரு இந்தியர் சஞ்சீவ் $50,000 இழந்ததாகவும் கூறியுள்ளனர். அந்த நிறுவன ஊழியர்கள் ‘சிக்மா-ஒன் கேபிடல்’ என்ற பெயரையும் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
துபாய் நிதி சேவைகள் ஆணையத்தின் அங்கீகாரம் இன்றி சிக்மா-ஒன் இயங்கியதும், அதன் முகவரி போலியானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது DuttFx, EVM Prime போன்ற முன்னாள் மோசடி நிறுவனங்களின் நடைமுறையைப் போலவே நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.