கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டதால் ஆரம்பமான விவகாரம் பரபரப்பாக மாறியது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்துத்துவா அமைப்பினரின் மனுவுக்கு இணங்க, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் அந்த உத்தரவுப்படி தீபம் தர்கா அருகே ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகேதான் ஏற்றப்பட்டது. இதையடுத்து, நீதிபதி சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் வீரர்களை இணைத்துக் கொண்டு மனுதாரர் தர்கா அருகே தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். ஆனால் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி போலீசார் மலை ஏற அனுமதி மறுத்ததால், சிஐஎஸ்எஃப் குழு திரும்பிச் சென்றது.

 

இந்த சூழ்நிலையில், தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததை எதிர்த்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மலை ஏற முயன்ற போது போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தள்ளுமுள்ளல் ஏற்பட்டது. தடுப்புகளை தூக்கி எறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் நடந்தன. இதில் ஒரு போலீஸ் வீரர் காயமடைந்தார். பதற்றம் அதிகரித்த நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவில், “இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்க முயலும் திமுக அரசு வீழ்த்தப்படும். தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததுடன், திரண்டிருந்த முருக பக்தர்களை திமுக அரசு தாக்கியுள்ளது.

இந்துக்களின் மதநம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக, நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது.
தொடர்ந்து இந்து விரோத போக்கைக் கடைபிடிக்கும் திமுக, விரைவில் முருகப்பெருமானின் அருளால் மக்களால் துரத்தப்படும்,” என்று தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.