கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, தர்கா அருகே தீபம் ஏற்றப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் வீரர்களை இணைத்துக் கொண்டு மனுதாரர் தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து போலீசார் மலை ஏற அனுமதி மறுத்ததால், சிஐஎஸ்எஃப் வீரர்கள் பின்னங்கியுள்ளனர். இதனிடையே மலை உச்சி தூணில் தீபம் ஏற்றாததை எதிர்த்து பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளல் செய்ததுடன், தடுப்புகளை தூக்கி எறிந்து தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில் ஒரு போலீசார் காயமடைந்தார். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The DMK Govt’s hostility toward Sanatan Dharma is no longer a matter of interpretation; it is a fact. The Hindu Religious & Charitable Endowment Department (which is supposed to serve Hindu devotees) appealed against a court order blocking the lighting of the sacred Karthigai… pic.twitter.com/EoXkSTt9Hi
— K.Annamalai (@annamalai_k) December 3, 2025
இந்நிலையில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, “திருப்பரங்குன்றத்தில் புனித கார்த்திகை தீபம் ஏற்றலை தடுக்க நீதிமன்ற அனுமதிக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீடு செய்திருப்பது, திமுக அரசின் சனாதன தர்ம விரோதத்தைக் காட்டுகிறது.
நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து பக்தர்களின் மதச் சடங்குகளைத் தடுக்கிறது என்பது அரசின் திருப்திப்படுத்தும் அரசியலை வெளிப்படுத்துகிறது. சனாதன தர்மம் மீண்டும் மீண்டும் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார். மேலும் இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காவல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
