சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் தீபாவளி நாளன்று துயரமும் அதிர்ச்சியும் அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரே ஆண்டே ஆன புதுமணத் தம்பதியினர், தங்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஹிம்மத் எனும் ஹிதேஷ் யாதவ் என்ற இளைஞர், தனது மனைவி லட்சுமி யாதவை கொன்று தற்கொலை செய்ததாகவும், இதனை முன்கூட்டியே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பதிவில், தனது தற்கொலைக்கு மனைவியின் பெற்றோர்களே காரணம் என்று ஹிதேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் கரேலிபாரி காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஹார்டி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

போலீசார் கூறுகையில், ஹிதேஷ் (வயது 24) மற்றும் அவரது மனைவி லட்சுமி (வயது 20) கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் சில மாதங்களுக்குப் பிறகு, தம்பதியினர் லட்சுமியின் பெற்றோர்கள் வசிக்கும் மொஹந்தி கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.

அக்டோபர் 19-ஆம் தேதி தீபாவளி விழாவுக்காக தங்கள் சொந்த ஊரான ஹார்டி கிராமத்துக்கு வந்தனர். தீபாவளி இரவு 11 மணியளவில் தங்கள் அறைக்கு சென்றனர். மறுநாள் காலை மீண்டும் மீண்டும் தட்டியும் பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த ஹிதேஷின் சகோதரர் கீதேஷ்வர், அறையின் ஜன்னல்  வழியாகப் பார்த்தபோது, லட்சுமி தரையில் விழுந்தும், ஹிதேஷ் கூரையில் தூக்கிட்டு இருந்ததும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட பிரேதப் பரிசோதனையில், லட்சுமி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதும், ஹிதேஷ் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. ஹிதேஷின் இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் ஹிம்மத் யாதவ், என் மனைவி லட்சுமியை கொன்றேன், காரணம் அவளது பெற்றோர்” என எழுதியிருந்தது, இதனால் அந்த பகுதி முழுவதும் துயரமும் அதிர்ச்சியும் நிலவுகிறது