தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். திருத்தணி ரயில் நிலையத்தில் சாமானியர் ஒருவர் தாக்கப்பட்டதும், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர் போலீசாரையே கத்தியுடன் விரட்டியதும் அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் எப்போது, யார் தங்களைத் தாக்குவார்களோ என்ற உயிர் பயத்திலேயே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் புழக்கத்தால் தினசரி வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சாவே இல்லை என்று கூறும் அமைச்சர்களைச் சாடியுள்ள அவர், அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கஞ்சா செடி வளர்ந்திருப்பதையும், சமீபகாலமாக நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப் பொருட்களையும் சட்டம் ஒழுங்கையும் கட்டுப்படுத்தத் தவறிய ‘திறனற்ற’ அரசு, எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 2026-ஆம் ஆண்டு இந்த விடியா ஆட்சியிடமிருந்து தமிழகத்திற்கு விடுதலை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
