தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 4 முனைப் போட்டிகளால் களைகட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக மற்றும் தேமுதிக தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், திமுக தலைமையிலான 26 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியில் விசிக மற்றும் தேமுதிக களம் காண்கின்றன. இதில் விசிக இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதேநேரம், புதிதாகக் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது விசிக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மாநில அரசியலில் தடம் பதிக்கும் வகையில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால், திமுக தலைமையின் அழுத்தம் காரணமாக அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக அத்தொகுதியில் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருமாவை அவமதித்தாரா பிரேமலதா? – ஸ்டாலினுக்கு மட்டும் மரியாதையா?#SSnews #dailynews #NewsUpdate #Thirumavalavan #PremalathaVijayakanth #DMDK #VCKParty pic.twitter.com/U64kfmjndS
— SS News Digital (@SSNEWSDigital) April 10, 2026
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 9 வேட்பாளர்களைத் திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பெயரைத் திருமாவளவன் குறிப்பிட்டபோது, அவர் எழுந்து நின்று வணக்கம் செலுத்தாமல் அமர்ந்தபடியே சிரித்துக்கொண்டிருந்தது விசிகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் பிரேமலதாவின் பெயரை அறிவித்தபோது அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால், திருமாவளவன் அறிவிக்கும்போது அவர் காட்டிய மெத்தனம், சாதியப் பாகுபாட்டின் வெளிப்பாடாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர். இதுகுறித்து விசிகவினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உங்கள் பெயரை உச்சரித்து அழைக்கும் போது எழுந்திருக்காதது ஏன் என கையில் பெரிய பேனர்களை வைத்து எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
