
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி இருந்தார். இவருக்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது.
இதனால் தன்னுடைய கள்ளக் காதலியை அவர் பீளமேடு பகுதிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் புகார் கொடுத்ததால் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அவர் தன் கணவருடன் செல்ல மறுத்ததால் பின்னர் தாயாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தன்னுடைய கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் கோபி மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். அவர் சம்பவ நாளில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு பீளமேடு ரயில்வே ட்ராக் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். பின்னர் கோபியை அவருடைய நண்பர்கள் மீட்டு அறைக்கு அழைத்து சென்ற நிலையில் மறுநாள் பார்க்கும்போது எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார்.
இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கோபி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.