தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த ஒரு வீராங்கனை, இன்று வரதட்சணை கொடுமையால் தனது நினைவாற்றலையும், பேச்சுத்திறனையும் இழந்து உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வாரணாசி பரமானந்தப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா சரோஜ். தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனையான இவருக்கு, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வேயில் இளநிலைப் பொறியாளராக (JE) பணிபுரியும் அமித் வர்மா என்பவருடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அமித்திற்கு கோரக்பூரில் பணி நியமனம் கிடைக்கவே, பிரியா அவருடன் அங்கு குடியேறினார்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்த அவர்களது வாழ்க்கையில், சில மாதங்களிலேயே வரதட்சணை அரக்கன் நுழைந்துள்ளான். அமித், பிரியாவின் பெயரில் உள்ள நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவனின் கொடுமைகளை ஆரம்பத்தில் யாரிடமும் சொல்லாமல் மறைத்த பிரியா, ஒரு கட்டத்தில் தனது தாயிடம் முறையிட்டுள்ளார். இதுகுறித்து அமித்தின் பெற்றோரிடம் பேசியும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து 14 மாதங்கள் ஆன நிலையில், பிரியா தற்கொலைக்கு முயன்றதாக அவரது தாயார் நிஷாவிற்குத் தகவல் கிடைத்துள்ளது. பதறியடித்துக் கொண்டு கோரக்பூர் சென்ற தாய், அங்கு கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது. பிரியா உயிருடன் இருந்தாலும், மிக மோசமான நிலையில் கோமாவில் இருந்துள்ளார்.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், பிரியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போது அவர் தனது நினைவாற்றலையும், பேசும் திறனையும் முற்றிலுமாக இழந்துவிட்டார். மைதானத்தில் துடிப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு வீராங்கனை, இன்று தனது அடையாளத்தையே மறந்து முடங்கிக் கிடப்பது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இது குறித்து பிரியாவின் தாய் கூறுகையில், “எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவளது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.