திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விளக்கமளித்துள்ளார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இறுதிக்கட்ட முடிவு என்பது கட்சியின் மேலிடம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகளுக்குப் பிறகே முறைப்படி அறிவிக்கப்படும் என்று அவர் சமநிலையான பதிலை அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீதிருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் சமீபகாலமாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், ஆன்மீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தொகுதியில் பாஜகவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மற்றும் தீப விவகாரத்தில் பாஜக எடுத்துள்ள நிலைப்பாடு ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் இத்தொகுதியில் தனி முத்திரை பதிக்க கட்சி விரும்புவதை அவரது பேச்சு உணர்த்தியது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், முக்கியத் தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
