சமூக வலைதளங்களில் ‘வியூஸ்’ மற்றும் ‘லைக்குகளுக்காக’ இளைஞர்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து போவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பிரபல உணவகமான மெக்டொனால்ட்ஸிற்கு (McDonald’s) சென்ற ஒரு இன்ஃப்ளூயன்சர், அங்கிருந்த வெறும் 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு கப்பைத் திருடியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பொருளைத் திருடியதை ஏதோ சாதனை போலத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். திருடியதை அவர் பெருமையாகக் கூறியதுதான் இப்போது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

​இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “50 ரூபாய் கப்புக்காகத் திருடன் என்ற பட்டத்தைப் பெறுவதா?” என அவரை விளாசி வருகின்றனர். “உங்களைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு இதையா கற்றுக் கொடுக்கிறீர்கள்?” எனவும், “இன்ஃப்ளூயன்சர் என்ற பெயரில் இப்படிப்பட்ட மலிவான விளம்பரங்கள் தேவையா?” எனவும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. திருட்டை ஒரு கலாச்சாரம் போல மாற்றி வரும் இதுபோன்ற இன்ஃப்ளூயன்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்குப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.