தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ‘வாரிசு அரசியல்’ குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. திமுகவின் வாரிசு அரசியலுக்குத் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், ஆனால் திமுகவில் கலைஞர், ஸ்டாலின், இப்போது உதயநிதி என ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவராகவும் முதலமைச்சராகவும் வர முடியும் என்ற நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அங்கு ஊழல் அதிகமாக நடக்கும் என்றும், குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

முன்னதாக நேரு குடும்பத்தினர் பிரதமர்களாக இருந்தபோது வைக்கப்பட்ட அதே விமர்சனம், இன்று திமுகவின் மீது வைக்கப்படுவதாகவும், மக்கள் இந்த ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவை நேருக்கு நேர் சந்திக்க முடியாதவர்கள் கூறும் ‘இத்துப்போன’ குற்றச்சாட்டு இது என்று கூறினார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் மக்கள் வாக்களித்தால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடியும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, எங்களை ஊழல் கட்சி என்று சொல்வது வேடிக்கையாக இருப்பதாகவும், பாஜகவில் இருப்பவர்களே ஊழல்வாதிகள் என்றும் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.